(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(05) நடைபெற்ற முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.
போட்டியின் வெற்றி குறித்து இலங்கை அணியின் இருபதுக்கு 20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது,
அணியில் இன்னுமொரு சுழல் பந்துவீச்சாளர் இடம்பெற்றிருந்தால் அந்தப் போட்டியிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருப்போம் என போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நான் தெரிவித்திருந்தேன்.
ஆனால் இந்தப் போட்டியில் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். இதனால் எதரிணியனரை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
அணியில் உள்ள இளம் வீரர்கள் போட்டி குறித்த சிறப்பானதொரு முன் ஆயத்தைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் தான் வெற்றிபெற முடிந்தது. அதுமாத்திரமின்றி, உலகின் முதல்நிலை இருபதுக்கு 20 அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
மேலும், நான் முன்னர் கூறியிருந்ததைப் போல எம்மிடம் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பு சரியான நேரத்தில் கிடைத்தால் எமது கிரிக்கெட் இதைவிட நல்ல நிலையில் இருந்திருக்கும் எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் இன்னும் முன்னேற்றம் காணும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என தெரிவித்தார்.
வெற்றிக்காக நாங்கள் ஒருசில உபாயங்கள் மற்றும் நுணுக்கங்களையும் கையாண்டோம். எனவே அணித் தலைவராக நான் மிகப் பெரிய வெற்றியையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன்.
அத்துடன், எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் சிறந்த முறையில் தயாராகி தொடரைக் கைப்பற்றி இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுப்பதற்கு முயற்சிப்போம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியொன்றில் தோற்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.