ஆபிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு வாழும் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சோமாலியாவின் தென் மேற்கு வளைகுடா பகுதியில் மட்டும் 110 பேர் பட்டினியால் இறந்த தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 48 மணி நேரத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள அவ்டின்லே நகரில் ஏராளமானவர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்துள்ளனர். அங்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. அதனால் அங்கு காலரா நோய் பரவி வருகிறது.
இந்த பட்டினி சாவு ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டும் வெளியாகி உள்ளது. இதுபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் உணவின்றி உயிரிழக்கின்றனர்.
எனவே வறட்சி பாதித்த பேரழிவு நாடாக சோமாலியா ஜனாதிபதி முகமது அப்துல்லாகி பார்மஜோ அறிவித்துள்ளார். உதவி செய்யும்படி அமெரிக்காவில் உள்ள முன்னணி 13 அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சோமாலியா அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகிறது. இங்கு கடந்த 1992-ம் ஆண்டில் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வறட்சி காரணமாக உணவின்றி உயிரிழந்தனர். அதே போன்று 2010 முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர்.