அடுத்த மாதம் 18ம் திகதி மஹிந்தவே நாட்டின் பிரதமராவார். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மஹிந்தவுக்கு நியமனக் கடிதத்தை மைத்திரிபால வழங்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிளின் தலைவர்கள் முன்னணியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த முதலாவது பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியின் உடலில் பச்சை இரத்தமே ஓடுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை அதனை அவர் காட்டினார். எமக்கு ஜனவரி மாதத்திலிருந்து இந்த சந்தேகம் இருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.ம.சு.மு. வின் அனைவரும் ஒரு அணிக்கு வந்துவிட்டனர். எம்மை ஒற்றுமைப்படுத்தியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி.
ஜனாதிபதியை குறைகூறவில்லை. அவரை ஜனாதிபதியாக்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தை அமைத்துக்கொடுக்க முயற்சிக்கிறார்.
ஆனால் எமது தலைவரை நாங்கள் உருவாக்கிவிட்டோம். நுகேகொடவில் ஆரம்பித்து அனுராதபுரத்துக்கு வந்துள்ளோம். எமது வெற்றியை சிறிசேன அல்ல பராக் ஒபாமாவும் தடுக்க முடியாது.
சிறிசேனவுக்கு 62 லட்சம். எமக்கு 58 லட்சம். அன்று 58 லட்சத்தைக் கொண்ட அனைவரும் எம்முடன் உள்ளனர்.
ஆனால் 62 லட்சத்தைக் கொண்டு வந்த கூட்டமைப்பு 8 லட்சம் வாக்குகளுடன் தனித்துவிட்டது.
ஐந்து இலட்சம் வாக்குகளுடன் மக்கள் விடுதலை முன்னணி தனித்துவிட்டது.
இதேவேளை நாட்டில் அபிவிருத்தி நின்று விட்டதால் 10 லட்சம் வாக்குகள் எமக்கு கிடைக்கும். எனவே 68 லட்சம் வாக்குகளை பெறுவோம்.
ஐ.ம.சு.மு. வெற்றிபெற்றாலும் மஹிந்தவை பிரதமராக்க மாட்டாராம். ஆனால் அதிக எம்.பி. க்களின் விருப்பத்தைக் கொண்டவரை பிரதமராக நியமிக்கவேண்டும்.
மஹிந்தவை அரசியலுக்கு கொண்டு வந்து விட்டோம். வேட்பு மனு கொடுக்கமுடியாது என்று கூறினார்கள். அதனையும் பெற்றுவிட்டோம்.
எனவே அடுத்த மாதம் 18ஆம் திகதி மஹிந்தவே நாட்டின் பிரதமராவார்.
வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மஹிந்தவுக்கு நியமனக் கடிதத்தை மைத்திரிபால வழங்கவேண்டியேற்படும்.
ரணில் இருந்த அலரி மாளிகைக்கு மஹிந்த போக முடியாது.
ஜனவரி மாதம் மஹிந்தவை தோற்கடித்தது ஐக்கிய தேசிய கட்சி அல்ல. மாறாக அமெரிக்காவும் இந்தியாவுமே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது.
எமக்கு மேலும் தடைகள் வரலாம், நாம் தடைகளை கண்டு பின்வாங்கும் பச்சோந்திகளல்ல என்றார்.
(riz)