ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் மார்ச் 6ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதுவரை குறித்த ஆணைக்குழுவுக்கு சுமார் 1400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இவற்றில் 900 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் வரையறைக்கு உட்பட்டவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஆணைக்குழுவின் காலத்தை தொடர்ந்தும் நீடிக்கவுள்ளதாக, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, லெசில் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.