பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு..

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லையை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆணைக்குழுவை நியமித்தார்.

அப்போது, குறித்த குழுவின் கால எல்லை, 2017 ஏப்ரல் 27ம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதனை ஜூலை 27ம் திகதி வரை நீடித்ததோடு, பின்னர், அந்த கால வரையறையும் நிறைவடையும் தருவாயில், மேலும் மூன்று மாதங்கள், அதாவது ஒக்டோபர் 27ம் திகதி வரை, ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீடிக்க, தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, அந்தக் காலஎல்லை நிறைவடைவதற்கும் இன்னும் இரு தினங்களே உள்ளது.

இந்தநிலையில், டிசம்பர் 8ம் திகதி வரை பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லையை நீடித்து நேற்று வர்த்மானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.