நாடாளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று(23) சுகாதார அமைச்சுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இலவச சுகாதார சேவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாட்டின் பொதுமக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை பலமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அடுத்துவரும் சில மாதங்களுக்கு போதுமான அளவில் மருந்துப் பொருட்களை பேணி வருவதற்கு தேவையான தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, மக்களை குழப்பும் வகையில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இத்தகைய போலிப்பிரச்சாரங்களை முறையடித்து, மக்களுக்கு அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
மேலும், சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் அதனை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.
சுகாதாரம் போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.