ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக ஒன்று கூட அழைப்பு..

டெங்கு நோய் வேகமாகப் பரவுவது தொடர்பாகவும் அந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் டெங்கு ஒழிப்பு செயலணியை உடனடியாக ஒன்று கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அவ்வகையில், ஜனாதிபதியின் தலைமையில் டெங்கு ஒழிப்பு செயலணி, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(16) ஒன்று கூடவுள்ளது என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,623 வரை அதிகரித்துள்ளதுடன், 115 மரணங்களும் சம்பவித்துள்ளன.

2014 ஆம் ஆண்டு 47,246 டெங்கு நோயாளர்களும் 97 மரணங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளதுடன், இந்நிலைமை 2015 ஆம் ஆண்டு 29,777 நோயாளிகளும் 60 மரணங்களுமாகக் குறைப்பதற்கு சுகாதார மற்றும் நோய் தடுப்பு பிரிவுக்கு முடியுமாக இருந்தது.

மீண்டும் 2016 ஆம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,150 வரை அதிகரித்துள்ளதுடன், 90 மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஆபத்தான நிலைமையைக் கவனத்திற் கொண்டு டெங்கு பரவுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடித் தீர்வுகள் குறித்து இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)