ஜனாதிபதி தலைமையில் “ஜனாதிபதி ஏற்றுமதி விருது” வழங்கும் விழா.

ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா நேற்று பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.

ஏற்றுமதித் துறைக்கு பங்களித்தவர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா இம்முறை 20வது தடவையாக நடைபெறுகிறது.

2014/2015 வருடத்திற்கான குறித்த 10 துறைகளில் 113 விருதுகள் இதன் போது வழங்கப்பட்டதுடன், அதில் 20 பேர்களுக்கான விருதுகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

வருடத்திற்கான இலங்கை ஏற்றுமதியாளர், உச்சபட்சம் தூய வெளிநாட்டு நாணயங்களை ஈட்டிய நிறுவனம், அதிக சந்தை பன்முகத்தன்மை கொண்ட  ஏற்றுமதியாளர், வருடத்தின் சிறந்த இலங்கை ஏற்றுமதி வர்த்தகச் சின்னம், இந்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள சிறந்த பல்தேசியக் கம்பனி, நிலையான அபிவிருத்திக்குப் பங்களித்த சிறந்த ஏற்றுமதி நிறுவனம், ஏற்றுமதித் துறையில் அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திய நிறுவனம், பிரதேச மட்டத்தில் ஏற்றுமதித் துறைக்கு அதிக பங்களிப்புகளை செய்த ஏற்றுமதியாளர், வளர்ந்து வரும் சிறந்த ஏற்றுமதியாளர், ஏற்றுமதித் துறைக்காக சிறந்த துணை சேவை வழங்குனர் ஆகிய துறைகளில் 10 விசேட விருதுகள் மற்றும் பொருட்கள் சேவைகள் வகைகளின் கீழ் 93 விருதுகள் உட்பட 113 விருதுகள் இதன் போது வழங்கப்பட்டது.

அமைச்சர்களான ரவி கருணாநாயக, மஹிந்த அமரவீர, நவீன் திசாநாயக, மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரா மல்வத்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.