உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேஷ் சாஞ்சியில் நடைபெறவுள்ள அனைத்து மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்.
இந்த இரு நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய விஜயத்தை நிறைவு செய்து, அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு செல்கின்றார்.
தாய்லாந்து மற்றும் வியட்னாம் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டினை மத்திய பிரதேஷ் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் வலய நாடுகளுடனான மதம் சார்ந்த ஒற்றுமை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றதன் பின்னர் இந்தியாவிற்கு செல்லும் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் , இலங்கைக்கான இந்தியாவின் புதிய முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளனர்.
(நன்றி – வீரகேசரி)