இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று(07) நடைப்பெறுகின்ற இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் பேண்தகு மற்றும் சமாந்தரமான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அமைப்பின் 20வது ஆண்டு நிறைவிற்கு சமகாலத்தில் இம்முறை அரச தலைவர்களின் மாநாடு கோலாகலமாக நடைபெறுகின்றது.
இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான மற்றும் சுபீட்சமான வலயமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பினை வலுப்படுத்தல் என்பதே இவ்வருடத்தின் தொனிப்பொருளாகும்.
எவ்வாறாயினும் இலங்கை மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கிடையில் மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் இரண்டும் கைச்சாத்திடப்படவுள்ளன.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் பீ.இராதாகிருஷ்ணன், சுஜீவ சேனசிங்க உள்ளிட்டோர் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.