ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் அங்குள்ள இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என, அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் கங்காநாத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் இருவர் மாத்திரமே காயடைந்துள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பானின் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலின் 11.3 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை உண்டான நிலநடுக்கத்தை ஜப்பானின் புவியியல்சார் ஆய்வு நிறுவனம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 ஆக பதிவு செய்திருந்ததது.
எனினும், பின்னர் அமெரிக்க புவியியல்சார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவிலானது, என்று தெரியவந்தது.
இன்றைய நிலநடுக்கம் உருவான பகுதியில்தான், புகுஷிமா டாய்ச்சி என்ற ஜப்பானின் அணுமின்சார உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளதால் இந்த பகுதியை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சுனாமி எனப்படும் பேரலைகளின் எழுச்சியால் புகுஷிமா அணுஉலையில் இருந்த மூன்று ‘ரியாக்டர்’கள் உருகியதும், சுமார் 18 ஆயிரம் பேர் இறந்தும், காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.