ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என இறந்த மீனவரின் நண்பர்கள் பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிஜ்ஜோ (வயது 21) என்பவர் உயிரிழந்தார்.
இலங்கை கடற்படையால் மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற தொடங்கி உள்ளன.
இறந்த மீனவர் பிரிஜ்ஜோ பேஸ்புக்கில் அவரது நண்பர்கள் ஒரு உருக்கமான அழைப்பை விடுத்துள்ளனர். அதில், “இதுவரை இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டுக்கு 546 மீனவர்கள் இறந்துள்ளனர். வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தந்த மாணவர்கள் எங்கள் மீனவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள தங்கச்சிமடம் ஏசு வளாகத்துக்கு வருகை தாருங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த செய்தி பேஸ்புக்கில் வேகமாக பரவி வருகிறது.
மீனவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு வகையான “மீம்ஸ்கள்” பேஸ்புக்கில் உணர்ச்சி பூர்வமாக பதிவிடப்பட்டு வருகிறது. டிவிட்டரில் #tnfishermen என்ற ஹேஷ் டேக்குளில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான டிரண்டிங்கில் இடம் பிடித்தது.
சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் மூலமும் இந்த தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று கருதி ராமேசுவரத்தில் முக்கிய இடங்கள், கடற்கரை பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.