ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் போட்டிக்கான அனுமதியை கோரி, தற்போது சென்னை மெரினா கரையில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், இந்த விடயத்தை வலியுறுத்தி, உலக புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதேநேரம் நேற்றைதினம் இதுவிடயமாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வமும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.
எனினும் இந்த சந்திப்பில் சாதகமான தீர்மானம் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் இந்த போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை இன்று பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இந்த போராட்டத்தக்கு ஆதரவு தெரிவித்து, இலங்கையிலும் பல இடங்களில் ஆதரவு ஒன்று கூடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான ஒன்று கூடல்கள் நேற்றும் நேற்று முன்தினமும் இடம்பெற்றது.
இவ்வாறான ஆதரவு ஒன்று கூடல் ஒன்று நாளையதினம் காலிமுகத்திடலில் இடம்பெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
