ஜாலியவின் ரீட் மனு நிராகரிப்பு…

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்தே மேல் முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு தள்ளுபடி செய்தது.

தூதுவராகிய தமது வரப்பிரசாதங்களை இரத்து செய்யுமாறு வெளிவிவகார அமைச்சுனால் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை சட்டவிரோதமாக அறிவித்து அதனை இரத்து செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ஜாலிய விக்ரமசூரிய தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இம்மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்ட ஜெனரல் யசந்த கோதாகொட நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தூதுவர்களை நியமித்தல் மற்றும் நீக்குவதற்கான தீர்மானங்களை ஜனாதிபதியே மேற்கொள்கின்றார். இதனால் ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லையென யசந்த கோதாகொட தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுக்காமலே தள்ளுபடி செய்தது.