பாகிஸ்தான் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று லாகூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.
பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஹபீஸ், அணித்தலைவர் அசார் அலி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் குவித்தனர்.
அசார் அலி 79 ஓட்டங்களிலும், ஹபீஸ் 86 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சோயப் மாலிக் ஒருநாள் போட்டியில் 8வது சதத்தை அடித்தார்.
மறுமுனையில் சிறப்பான விளையாடிய ஹாரிஸ் சோகைல் (89) அரைசதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து 375 ஓட்டங்களை குவித்தது. ஜிம்பாப்வே சார்பில் உட்சேயா 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்களான சிபண்டா (23), சிக்கந்தர் ராஜா (36) சுமாரான தொடக்கம் கொடுத்தனர்.
நிதானமாக விளையாடிய ஹாமில்டன் மசகட்சா (73) அரைசதம் கடந்தார். சீன் வில்லியம்ஸ் (36) நிலைக்கவில்லை.
பொறுப்புடன் விளையாடிய அணித்தலைவர் எல்டன் சிகும்புரா, ஒருநாள் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 117 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. முடும்பாமி (21), உட்சேயா (21) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் வாஹாப் ரியாஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். மாலிக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.