ஜெயலலிதாவுக்கு மோடியிடமிருந்து 1,000 கோடி

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

ஏற்கனவே 940 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.நவ.,8 முதல் பெய்த மழையில் 8,841 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது. ‘இடைக்கால நிவாரணமாக உடனடியாக 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

அதைத் தொடர்ந்து உடனடியாக 940 கோடி ரூபாயை பிரதமர் ஒதுக்கினார். கடந்த சில தினங்களாக பெய்த மழையில் சென்னை தனித்தீவானது. நேற்று காலை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று சேதப் பகுதிகளை பார்வையிட்டார். மதியம் ராணுவ விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான தளத்திற்கு வந்தார். அங்கிருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடன், ராணுவ ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், வெள்ள சேதத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின் தலைமைச் செயலகம் அருகே உள்ள ஐ.என்.எஸ்., ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்தார்.அவரை கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வரவேற்றனர். அங்கு பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மோடி பேசும்போது ”தமிழக மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன்,” என, தமிழில் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, மழை சேதங்களை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன், ஹெலிகாப்டரில் சுற்றி பார்த்தேன். அளவுக்கு அதிகமான மழையால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு, இந்திய மக்கள் துணை நிற்கின்றனர். தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உடனடியாக 1,000 கோடி ரூபாய் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே 940 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் ‘தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தோள் நிற்கும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.