மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது வேடத்தில் யார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தன.
இயக்குனர்கள் பாரதிராஜாவும் விஜய்யும் தனித்தனியாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களோடு இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்ஷினியும் களத்தில் இறங்கினார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக பிரியதர்ஷினி அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளவயது நடிகை வாழ்க்கை முதல் மருத்துவமனை இறுதி நாட்கள் வரை அனைத்தும் படமாக்கப்பட உள்ளன. அவரது சினிமா வாழ்க்கையை காட்டுவதற்காக அவர் நடித்த காலத்தில் கோடம்பாகத்தில் இருந்த சினிமா ஸ்டூடியோக்களை செட் போட்டு உருவாக்க இருக்கிறோம்.
சினிமா முதல் அரசியல் வரை அவருடன் பயணித்தவர்கள் வேடங்களில் நடிக்க முக்கிய நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும். அந்தக்களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக்காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது பெருமையாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி ஆரம்பிக்க திட்ட மிடப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் நித்யா மேனன் மட்டும்தான் துணிச்சலுடன் ஒப்புக்கொண்டார். வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘தி அயர்ன் லேடி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வேடத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

