ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பேரூந்து அருகில் மூன்று குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பிரதான வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொமாகொ அணிக்கு எதிரான உள்ளுர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க அந்த அணி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்தது.
இந்த தருணத்திலேயே பேரூந்துக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், விளையாட்டு மைதானத்தை சுற்றி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கால்பந்துப் போட்டி இன்று(12) தாமதமாக இடம்பெறும் வண்ணம் ஒத்திவைக்கப்பட்டது.
ஹோசஸ்டன் என்ற பகுதியில், நகருக்கு வெளியே ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இது தொடர்பாக அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொருஸியா டார்ட்மண்ட் அணி புறப்பட்ட சிறிது நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பேரூந்தின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் முன்னிலையில் உள்ள அணிகளில் நான்காவது முக்கிய அணி டார்ட்மன்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.