ஜொன்சன் நிறுவனத்தினருக்கு 1000 கோடி நஷ்டஈடு வழங்கத் தீர்ப்பு

பெண்ணொருவருக்கு 1000 கோடி அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாக வழங்குமாறு பிரபல நிறுவனமான ஜொன்சன் என்ட் ஜொன்சன் நிறுவனத்திற்கு அமெரிக்காவின் மிசூரி மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பர்மிங்ஹேம்,எலபாமா என்ற இடத்தில் வசித்த ஜெகொலின் பொக்ஸ் என்ற பெண் 35 வருட காலமாக குறித்த நிறுவனத்தின் தயாரிப்பான பவுடர் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

இந்நிலையில் குறித்த பெண் கடந்த 3 வருடத்திற்கு முதல் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தனது 62வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே குறித்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக நுகர்வோர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் குறித்த நிறுவனம் ஆராயாமல் தமது விற்பனையை அதிகரிப்பதையே நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றமையால் மோசடி, சதி மற்றும் கவனயீனம் ஆகியவற்றின் கீழ் குறித்த நிறுவனமானது புற்றுநோயால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்குமாறு மிசூரி நீதிமன்றம் ஜொன்சன் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக மிசூரி மாநில நீதிமன்றில் 1000 வழக்குகளும், ஜேசி மாநில நீதிமன்றில் 200 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.