ஜொன்ஸ்டன் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல்…

குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு முடிவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனுவினால் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்திருப்பதாவது; சதொச நிறுவன பண மோசடி தொடர்பில் தனக்கு எதிராக குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதியினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பிணை வழங்கப்பட்ட போதிலும் குருநாகல் மேல்நீதிமன்றினால் குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தன்னை வழக்கு முடிவுறும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் குறித்த மனுவில் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தனது வழக்கு நிறைவுறும் வரையில் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல்நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை இரத்து செய்யுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றினை முன்வைத்த போதிலும், அதனை மேல்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரித்ததாகவும் மனு தாரர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறித்த காரணத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவானது சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் கோரியுள்ள ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேன்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு எடுத்து இறுதித் தீர்ப்பினை வழங்கும் வரையில் தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் உயர் நீதிமன்றில் கேட்டுள்ளார்.