ஜோகோவிச்சிற்கு நான்காவது தடவையாகவும் சாம்பியன் வாகை

ஏடிபி உலக டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஏடிபி உலக டூர் தொடரின் 46 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ந்து 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை இதன் மூலம் ஜோகோவிச் படைத்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்தார்.

நோவக் ஜோகோவிச் ஏடிபி உலக டூர் தொடரில் சாம்பியன் பட்டம் பெறுவது இது 5வது முறையாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், 2012 முதல் தொடர்ந்து 4 முறை சாம்பியனாகியிருக்கிறார்.

இதன்மூலம் இங்கு 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை பீட் சாம்ப்ராஸ், இவான் லெண்டில் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜோகோவிச்.

சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இங்கு 6 முறை பட்டம் வென்றதே இன்றளவும் சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.