(FASTNEWS | COLOMBO) – புலிகள் வேண்டும் என கூறிய விஜயகலா மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுகின்றார் ஆனால் பெளத்த வாதம் பேசிய ஞானசார தேரர் சிறைக்கு செல்ல வேண்டியுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சி,வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;
“..பௌத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை ஏனைய மதங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பெளத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும் என பிரதமரும், சபை முதல்வரும் கூறினாலும் கூட இன்ற அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் ஒரே மட்டத்துக்கு கொண்டுவருவதன் முகமாக பெளத்தத்திற்கு இதுவரை கொடுத்த முன்னுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பில் 9 ஆம் உறுப்புரிமை ஒருபோதும் மாற்றப்படாது என கூறிய இவர்கள், மகாநாயக தேரர்கள் முன்னிலையில் மண்டியிட்டு கூறிய இவர்கள் இன்று கைகளையும், கால்களையும், தலையையும் நுழைத்து அரசியல் அமைப்பினை மாற்றும் நிலைமை உருவாகியுள்ளது.
புத்தசாசன அமைச்சருக்கோ அல்லது பிரதமருக்கோ அரசியல் அமைப்பில் பெளத்தத்திற்கான முன்னுரிமையை மாற்றியமைக்க அவசியம் இல்லையென்றாலும் கூட நிழல் பிரதமர் சுமந்திரனும் இவற்றை மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது. அவரிடம் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
மன்னர் நீதிமன்றத்திற்கு கல் வீசக்கூறிய நபர் இன்று அரசாங்கத்தில் அமைச்சரவையில் உள்ளார், புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறிய விஜயகலா எம்.பி இன்று அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் உள்ளார்.
ஆனால் நாட்டில் பெளத்த வாதம் பேசிய ஞானசார தேரர் இன்றும் சிறையில் உள்ளார். இதுவே இந்த அரசாங்கத்தின் நிலைமை. ஞானசார தேரருக்கு செயற்பட்ட சட்டம் ஏன் விஜயகலா எம்.பி விடயத்தில் செயற்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது…” என தெரிவித்திருந்தார்.