ஞானசார தேரரின் கருத்தால் பரபரப்பு;மிகப்பெரிய அழிவொன்றை சந்திக்க நேரிடும்[VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேசிய தலைவரொருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாடு நுகேகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும நிலையில், ஞானசார தேரரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக களமிறங்குவதாக அவரது ஊடகப் பேச்சாளராக பணியாற்றிவரும், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, மாத்தறையில் நடந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியாகியிருந்தன.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைவரொருவரை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேரர்கள் ஒன்று கூடுகின்றனர்.இது அதிசயமாக இருக்கிறது. உண்மையில் நாம் கட்சி சாராத தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்இ இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேசிய தலைவரொருவரையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிங்களவர்களுக்கு ஒரு தலைவர் வேண்டும். இந்த தலைவரை தேடும் பயணத்தில் மிகவும் கேவலமான ஒரு விடயமென்னவென்றால் மக்கள் இந்த பயணத்தில் வழிதவறியுள்ளனர். சரி பிழையை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

இந்த வேளையில் நாட்டிற்கு தேவை தேசிய தலைவர். நாட்டிற்கு வரவேண்டிய அனைத்து கேடுகளும் வந்துவிட்டன. பல வருடங்களுக்கு நாடு பின்னோக்கி சென்றுவிட்டது.

நாட்டை சுற்றி நாட்டுக்குள் எதிரிகள் முகாமிட்டுவிட்டனர். வஹப்வாதம், அடிப்படைவாதம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. அவர்கள் எம்மை குறிவைத்துள்ளனர். எம்மை பலவந்தப்படுத்துகின்றனர்.

இதற்கு முகம்கொடுப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் எங்கே? அதை தயாரிப்பதாக இருந்தால் எங்கள் மதகுருமார் ஒரே நோக்கத்தில், ஒரு கொள்கைக்கு, ஒரு வேலைத் திட்டத்திற்குள் ஒன்றுபட வேண்டும்.

தேசிய தலைவரொருவரைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், நாம் மிகப்பெரிய அழிவொன்றை சந்திக்க நேரிடும்.

ஒரு அமைப்பாக எமக்கு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரோ தேர்தலோ எதுவும் அவசியமற்றது எமக்குத் தேவை எமது நாடு எனவே இந்த நாட்டை உருவாக்கும் ஆட்சியை பற்றி நாம் முதல் தடவையாக கண்டியில் கூறியிருந்தோம். நாம் பௌத்தர்களுக்காக தனியான பௌத்த அரசாங்கமொன்றை உருவாக்குவோம்.

இந்த 70 வருடமாக நாட்டில் ஆட்சியமைத்துள்ள அனைத்து தலைவர்களுக்கும் அவர்களது பங்காளிகளுக்கும் கூறுவது என்னவென்றால், கட்சிகளையும் சின்னங்களையும் கைவிட்டுவிட்டு நாட்டுக்காக ஒன்றிணைய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.”