ஞானசார தேரர் இன்று கைதாகும் சாத்தியம்…

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று(17) மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு வளாகத்தில் காணப்படும் நீராவியடி குருகந்தை விகாரையின் விகாரதிபதி தேரரின் பூதவுடலை நல்லடக்கம் செய்யும் போது ஞனசார தேரர் நீதிமன்ற தீர்ப்பை மீறிச் செயற்பட்டதாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 23ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு எழுத்து மூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் நடவடிக்கையெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.