டளஸ் மற்றும் மனோஜின் வேட்பு மனுக்கள் உயர் நீதிமன்றம் செல்கிறது?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தறை மாவட்டத்தில்  தாக்கல் செய்துள்ள வேட்புமனு பட்டியலில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட முதன்மை வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவிற்கு இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளின் இரட்டை குடியுரிமை கொண்டிருப்பவர் என்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தறை மாவட்ட முதன்மை  வேட்பாளர் சுனில் அந்துன் நெத்தி தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

அதுபோன்றே மனோஜ் சிறிசேனவிற்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்.

எனினும் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணியின் கோரிக்கையை நிராகரிப்பதாக மாத்தறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி இரட்டை குடியுரிமை பெற்றுக்கொண்டவர்கள் எவராக இருந்தாலும் இலங்கை தேர்தலில் போட்டியிட முடியாது.

இதன் அடிப்படையிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாக சுனில் அந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.

(riz)