டாக்டரை கரம்பிடிக்கும் நடிகையின் திருமண நிச்சயதார்த்தம்

தமிழில் ‘யாரடி நீ மோகினி’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ஈரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வேலாயுதம்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். பரத நாட்டியமும் கற்றுள்ளார். பாடல்களும் பாடி உள்ளார். இவருக்கு சொந்த ஊர் கேரளாவில் உள்ள ஆலப்புழா.

தற்போது, சரண்யா மோகனுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. அரவிந்த் கிருஷ்ணா என்ற டாக்டரை மணக்கிறார். இவர் தற்போது திருவனந்தபுரம் வர்கலாவில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

சரண்யா மோகன் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணா திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் நடந்தது. நிச்சயதார்த்த படங்களை சரண்யா மோகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நிச்சயதார்த்தம் நடந்ததையும் அதில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

எனக்கும் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. என் வாழ்க்கையின் முக்கிய நாளாக இது அமைந்துள்ளது. நிச்சயதார்த்தம் நடந்ததை இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் எல்லோரது வேண்டுதலும் எனக்கு வேண்டும். என் மேல் அன்பும் ஆதரவும் காட்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டு உள்ளார்.