பிரபல தேடியந்திர தளமான கூகுளின் புகைப்படப் பிரிவில் ‘டாப் 10 குற்றவாளிகள்’ என்று ஆங்கிலத்தில் தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறுவதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “இந்த தேடல் முடிவுகள் எங்களை மிகவும் பாதித்துள்ளது. இது எந்த வகையிலும் எங்கள் நிறுவனத்தின் கருத்தல்ல. சில நேரங்களில் இதுபோன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கான தேடலின் முடிவில் இத்தகைய வியப்புக்குரிய பதில்கள் கிடைக்கின்றமை கவலைக்குரியதே.
‘டாப் 10 கிரிமினல்கள்’ என்ற ஆங்கிலத் தேடலில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று ஏற்படுத்திய குழப்பங்களுக்கும்,தவறான புரிதல்களுக்கும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.
மேலும் அவர் கூறும் போது, “சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘டாப் 10 கிரிமினல்கள்’ என்ற தேடலுக்கு விடையாக மோடியின் படம் கிடைக்கக் காரணம், பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று மோடியின் புகைப்படத்தையும் தவறான மெட்டா-டேட்டாவையும் (Meta Data) பயன்படுத்தியதே ஆகும்.
அந்தப் பத்திரிகை, கிரிமினல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த செய்திக் கட்டுரைகளில் பயன்படுத்தியிருந்த சில புகைப்படங்களும், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த மோடியின் பேச்சு தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களுமே, கூகுள் தேடலில் பிரதிபலித்துள்ளது.
இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட பிரிட்டிஷ் செய்தித்தாள் எந்த வகையிலும் மோடியை கிரிமினல் நடவடிக்கைகளுடன் இணைந்து செய்தி வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மோடி, கிரிமினல் நடவடிக்கை என்ற வார்த்தைகள் அருகருகே இடம் பெற்றிருந்ததே இந்தக் குழப்பத்துக்கு காரணம்” என்றார்.|
இதன் தொடர்ச்சியாக, Top 10 criminals தேடல் முடிவுக்கு மேலே ஒரு சிறு குறிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், இந்தத் தேடல் முடிவுகள் அனைத்தும் கூகுளின் கருத்து அல்லது நம்பிக்கை சார்ந்தது அல்ல என்றும், தங்களது அல்காரிதம் அடிப்படையில் இவ்வாறான தேடல் முடிவுகள் காணக் கிடைக்கின்றன என்றும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.