‘டாப் 10’ பாட்மிண்டன் தரவரிசையில் மீண்டும் காஷ்யப்

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் காஷ்யப் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். முன்னாள் 6-ம் நிலை வீரரான காஷ்யப், 12-வது இடத்திலிருந்து 10-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான சீனாவின் சென் லாங்குக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார் காஷ்யப்.

இதன்மூலம் கடந்த 14 ஆண்டுகளில் உலகின் முதல் நிலை வீரரை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமை யைப் பெற்ற காஷ்யப், தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். மற்றொரு இந்திய வீரரான காந்த் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் ஓர் இடம் முன்னேறி, 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு முறை வெண்கலம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய ஓபனில் முதல் சுற்றோடு வெளி யேறியபோதும், அவருடைய தரவரிசையில் எந்தப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து 14-வது இடத்திலேயே உள்ளார்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இரு இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் கலப்பு இரட்டையர் தரவரிசையில் முதல் 25 இடங்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.