டில்ஷானுக்கான தீர்வு விரைவில்.. – இதோ தேர்வுக்குழு தீர்மானம்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷானின் எதிர்கால கிரிக்கெட் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற போட்டி உள்ளிட்ட இருபோட்டிகளிலும்  டில்ஷான் துடுப்பாட்டத்தில் திறமையினை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

டில்ஷானுக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதே கிரிக்கெட் தேர்வுக் குழுவினது நோக்கம் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை – அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியினது முதல் இரு போட்டிகளுக்கு மட்டுமே அணி விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அதன் பிரகாரம், எஞ்சிய போட்டிகள் 3இலும் டில்ஷானுக்கு வாய்ப்பு கிடைப்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், போட்டிகள் ஆரம்பமாக முன்னர் தான் தற்போதைக்கு ஓய்வு பெற தீர்மானங்கள் எடுக்கவில்லை என டில்ஷான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.