டுபாய் வங்கியிலுள்ள 3 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் இன்னுமொரு வெளிநாட்டு வங்கியிலுள்ள 42 ஆயிரம் கோடி ரூபா நிதி மோசடி பற்றிய தகவலை வெளியிட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல காலஅவகாசம் கோரியுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பிலேயே அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு காலஅவகாசம் கோரினார்.
மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பினார். அத்துடன், இது தொடர்பாக பிரதமர் காலந்தாழ்த்தாது உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் இல்லாத காரணத்தால் அவர் சார்பில் கருத்து வெளியிட்ட சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில்;
“இவர் கோரியுள்ள விடயம் மிகவும் சிக்கலான விடயமாகும். அதிக தகவல்களைச் சேகரிக்கவேண்டியுள்ளது. எனவே, இந்தக் கேள்விக்குப் பதில் வழங்க பிரதமர் சார்பில் நான் காலஅவகாசம் கோருகின்றேன்” – என்றார்.