இந்திய அணியின் கெப்டனாக இருந்து கொண்டு, விளையாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆதாயம் தரும் வகையில் செயல்பட்டது தொடர்பாக தோனியிடம் பி.சி.சி.ஐ விசாரணை நடத்தவுள்ளது.
சீனிவாசனுக்கு பின் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தலைவராக டால்மியா பொறுப்பேற்றதில் இருந்து டோனிக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி ஏற்படுகிறது. டெஸ்ட் அணி கெப்டன் பதவியில் இருந்து திடீரென விலகினார். தற்போதைய வங்கதேச தொடரில் 19 வயது வீரர் ரஹ்மானை இடித்து தள்ளிய விவகாரத்தில் 75 சதவீதம் அபராதம் செலுத்தினார். இந்த வரிசையில் டோனிக்கு இன்னொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதாவது டொனியின் நண்பர் அருண் பாண்டேவுக்கு சொந்தமானது ‘ரித்திக் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம். ரெய்னா, ஜடேஜா மற்றும் பிரிமியர் தொடரில் சென்னை அணியின் வர்த்தக விவகாரங்களை இந்நிறுவனம் தான் கவனிக்கிறது.
இதனால் தான் கெப்டனாக தோனி இருக்கும் போட்டிகளில் ரெய்னா, ஜடேஜா என இருவரும் தவறாமல் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. இவ்விஷயத்தில் டோனி ஆதாயம் பெறும் வகையில் செயற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிறுவனத்தில் டொனிக்கு 15 சதவீத பங்குள்ளதாக கூறப்பட்டது. அதேநேரம் இந்த பங்குகளை கடந்த 2013ல் டொனி திரும்ப பெற்று விட்டார் என அந்நிறுவனம் அறிவித்தது.
பி.சி.சி.ஐ., தலைவராக டால்மியா பொறுப்பேற்றவுடன் இதுகுறித்து விசாரிப்பதாக தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ. தலைவர் டால்மியா, ஜோதிராதித்ய சிந்தியா, கஜாரியா என, மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது.
இதுகுறித்து டால்மியா கூறுகையில்,‘‘மூவர் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்த பின், அதன் விவரங்கள் பற்றி முறைப்படி அறிவிக்கப்படும்,’’ என்றார்.