அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு ட்ரம்பின் வெற்றிக்கு உதவுமாறு உளவுத் துறையினருக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ம் திகதி நடை பெற்றது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தோல்வியைத் தழுவினார்.
ஹிலாரி வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய போது அரசு இ-மெயில் சேவையை பயன்படுத்தாமல் தனிப்பட்ட இ-மெயில் சர்வரை பயன்படுத்தியதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஹிலாரியின் 6.5 லட்சம் இ-மெயில்கள் விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியாகின. இதன் பின்னணியில் ரஷ்ய உளவுத் துறை இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் போது சில மாகாணங்களின் தேர்தல் ஆணைய இணையதளத்தில் ரஷ்ய உளவுத் துறை ஊடுருவியதாகவும் (ஹேக்கிங்) குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அதிபர் ஒபாமாவின் உத்தரவின்படி அமெரிக்க புலனாய்வுத் துறை விசாரித்து அந்நாட்டு அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்பின் வெற்றிக்கு உதவுமாறு ரஷ்ய உளவுத் துறையினருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.