தடைவிதிப்புக்கு உள்ளாகிய ஜடேஜா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில்..

டெஸ்ட் போட்டிக்கான சகலத்துறை ஆட்டக்காரர் தரவரிசையில் இந்திய அணியின் பிரபல வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. இதில் 438 புள்ளிகளுடன் ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இலங்கை அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவர் 70 ஓட்டங்களை பெற்றதுடன் 5 விக்கட்டுக்களை கைப்பற்றி, அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான சகலத்துறை ஆட்டக்காரர் தரவரிசையில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பங்களாதேஷ் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினும் பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கக் கோவையை இரண்டாவது தடவையாகவும் மீறியமை குறித்த குற்றச்சாட்டில் இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)