தனது கிரிக்கெட் வாழ்வை பாதித்ததே ஜெயசூரிய – சமிந்த எரங்க

சனத் ஜெயசூரியாவால் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கை பாதிப்படைந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்க தெரிவித்துள்ளார்.

தொடர் காயங்களால் அவதிப்பட்டு வரும் சமிந்த எரங்க, இலங்கை அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு கிரிக்கெட் தொடர்பாக அவர் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “எனக்கு சிறுவயதில் கால்பந்து மீது தான் அதிக ஈடுபாடு இருந்தது. எனக்கு 16 வயது இருக்கும் போது கூட நான் ‘அண்டர்-19’ கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தேன்.

கால்பந்து வீரராக வர வேண்டும் என்றே எனது கனவு இருந்தது. ஆனால் எல்லாம் மாறிவிட்டது. அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளராக 19வது வயதில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்.

அப்போது நடந்த ஒரு விடயத்தை மறக்க முடியாது. அது எனது முதல் போட்டி. அப்போது ஓப்பனிங் பவுலராக நான் தான் பந்துவீசினேன். துடுப்பெடுத்தாடியது யார் தெரியுமா? சனத் ஜெயசூரியா.

மிகவும் பதற்றமாகவே தான் பந்துவீசினேன். எனது பந்தை அவர் அடித்து நொறுக்கியதில் அந்த போட்டிக்கு பிறகு எனக்கு 2 வருடங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது 8 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

மேலும், எனது அறிமுக போட்டியில் அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பிராட் ஹாட்டினை ஆட்டமிழக்க செய்ததை மறக்க முடியாது. அவர் தான் எனது முதல் விக்கெட்.

அதே போல் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.