உயர்கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் 20 வீதமானவர்களே பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர தகுதி பெற்றுக்கொள்கின்றனர்.
ஏனைய அனைவருக்கும் உயர்கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். எமது அரசாங்கம் உயர்கல்வியை மேம்படுத்த தனியார்துறையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது காணப்படும் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அதிகளவான சுய அதிகாரங்கள் வழங்கப்படும். பல்கலைக்கழக நடவடிக்கைகளை மேற்கொள்ள உபவேந்தர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும்.
தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கான சட்டங்களை உருவாக்கும் பணிகளை அப்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாக்க மேற்கொண்டிருந்தார். எனினும், பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக இந்நடவடிக்கை கைவிடப்பட்டது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டித் தெரிவித்துள்ளார்.