தனியார் கல்லூரிகள் அனைத்தும் கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பதிவு செய்ய அரசு திட்டம்..

இலங்கையில் பட்டப்படிப்பினை வழங்கும் எல்லா நிறுவனங்களையும் கொழும்பு பங்குச் சந்தையின் நிறுவனங்களாக பதிவு செய்து நிர்வாக சபையின் செயற்திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதன் ஊடாக அவற்றை மக்கள் உரித்துடைய நிறுவனங்களாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரம் தனியார் வைத்திய கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள் 50 ஆயிரம் ரூபாவினை செலுத்தி அரச வைத்தியசாலைகளில் மருத்துவ பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

தனியார் கல்லூரிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(15) இடம்பெற்றது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

“..மருத்துவ கல்வியை உள்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் அல்லது அரச பல்கலைக்கழகம் ஒன்றில் தொடர்வதற்கான நிபந்தனைகள் சட்டமூலமாக்கப்பட்டுள்ளது. மேற்படி தனியார் பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்களின் கல்வி தரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவற்றை முறையாக நெறிப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் கற்கை நிறுவனங்களில் மருத்துவ கற்கையை தொடரும் மாணவர்கள் இலங்கை மருத்துவச் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற பரீட்டைசைக்கு தோற்றி சித்தியெத்தினால் மாத்திரமே மேலதிக மருத்துவ கல்வித்துரையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நவீன வசதி வாய்ப்புக்கள் மிக்கதான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையினை அரச உடைமையாக இலவச சிகிச்சை வழங்கு வைத்தியசாலையாக மாற்றியமைத்து அரச பல்கலைகழக மாணவர்களுக்கும் மருத்துவ பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.

மேலும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமை பரிசில்களை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். அத்துடன் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் தொகையினையும் அதிகரிப்புச் செய்து அவர்களுக்கான பல்கலைக்கழக வசதிகளையும் மேம்படுத்திக் கொடுத்த தீர்மானித்துள்ளோம்..” என்றார்.

 

(rizmira)