தனி அறையில் அடைக்கப்பட்ட ரஞ்சனுக்கு விசேட பாதுகாப்பு; மனநலப் பிரச்சினை?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –விளக்ககமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் கதவுகளை மூடி, ஒருவரையும் அந்த பகுதிக்கு செல்ல முடியாத வகையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க நாளாந்தம் இரண்டு முறை உடற்பயிற்சி செய்வதற்காக மாத்திரம் சிறை அறையில் இருந்து வெளியே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய தொலைபேசி உரையாடல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவை அரச பகுப்பாய்வாளரிடம் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் ரஞ்சனை உள ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையிலேயே நேற்று சபை அமர்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முன்னர் முக்கிய குரல் பதிவுகள் சிலவற்றினை சபையில் சமர்ப்பிப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.