கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பது என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தன்னை கைது செய்ய தயாராகி வருவதாக அறியக் கிடைத்துள்ளதால், அதனை தடுத்து நிறுத்தும் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரிய கோத்தபாய இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், குறித்த இந்த மனு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ.பவன் பிரியந்த ஜயவர்தன, உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது கோத்தபாய ராஜபக்ஷ சார்பில் ஆஜராக சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மனுவில் பிரதிவாதிகளாக புதிய அமைச்சர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பதால், அதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கோரினார்.
இதனையடுத்து விசாரணைகளை ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர்கள், அன்றைய தினம் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர்.
இந்த மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை, ஜனாதிபதியின் செயலாளர், காவற்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிக் காவற்துறை மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.