முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தன் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் என் மனைவியிடம் நேற்று நிதி மோசடி விசாரணை பிரிவினால் 08 மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்றுமொறு நடவடிக்கையாக இன்று அல்லது நாளை என்னையும் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைத்து விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 08ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து விளக்கமறியலில் வைக்கின்றனர்.
தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக்குவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர், எனினும் அதனை செய்ய முடியாமையினால் என்னை அமைதியாக இருக்குமாறு கூறினார்கள், அவ்வாறு நான் செயற்படாதமையினால் என்னை கைது செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள்.
எனது 23 வருட அரசியல் வாழ்க்கையில் இதுவரை இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்படவில்லை, எனவே தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறு என்னை கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எவ்வித குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இந்த அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(riz)