இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ‘ராஜா ரங்குஸ்கி’ என்கிற படத்தின் புரமோஷனுக்காக ஆடிப் பாடியுள்ளார்.
‘மெட்ரோ’ சிரிஷ், சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, தரணிதரன் இயக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இப்படத்தை வாசன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிக்கிறது.
இப்படத்தின் புரமோஷனுக்காக யுவன்சங்கர் ராஜா, ஆடிப் பாடியுள்ளார். இதுகுறித்து இயக்குநர் தரணி தரண் கூறுகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, கடந்த இருபது ஆண்டுகளாக தன் இசையால் பலரையும் ஆட வைத்துக் கொண்டிருகிறார்.
அவர், ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் புரமோஷனுக்காக தானே பாடிய ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். யுவனின் இசையே படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் நேரத்தில், பாடல் வீடியோவில் தோன்றி அவரே நடனம் ஆடியிருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்.
யுவன் தன் ஆன்மாவில் இருந்து இசையமைத்த அந்த புரமோஷனல் பாடலுக்கு நடனமாட துடிப்பான, உற்சாகமான ஒருவர் தேவைப்பட்டார். ஒட்டுமொத்த குழுவும் யுவனை கேட்க, அவர் நீண்ட தயக்கத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் அந்த பாடலில் தோன்றி நடனமாடுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்றார்.