தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு…

ஆன்லைனில்(online) மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று(28) நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகளும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் மருந்து கடைகள் அடைப்பில் ஈடுபட்டு, கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று(28) மீண்டும் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க வரைவு அறிக்கை கடந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது. வைத்தியரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனவும், ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி வழங்க இருக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து அகில இந்திய அளவில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தை இன்று நடத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.