மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நேற்று (17) அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
பின் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நிதியமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோருடன் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
“கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதியன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமான நிலையில், அவரது மரணம் குறித்து விசாரணை தேவை என்று பல்வேறு தரப்பினரும் கோரியதை ஏற்று, அவரது மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள “வேதா நிலையம்”, ஜெயலலிதாவின் சிறப்புகளை விளக்கும் வகையில் நினைவிடமாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார்.
எந்த ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்படும்? அதற்கான காலக்கெடு என்ன? போன்ற கேள்விகளுக்கு, விரைவில் அது பற்றி அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்