தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த மூவரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படும், உறுப்பினர்கள் மூவரின் கோரிக்கை, ​கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று(18) நிராகரிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிரான வழக்கை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றாவிடின், தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அந்த உறுப்பினர்கள் மூவரும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானதி ராஜரத்னவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

எனினும், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான அதிகாரம் தனக்கில்லையெனத் தெரிவித்த நீதிபதி, அந்த வழக்கை, அத்தருணத்திலேயே விசாரணைக்கு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் எனக் குற்றம் சாட்டி, மேற்படி மூவருக்கு எதிரான வழக்கு, இன்று (18) அழைக்கப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்த அந்த மூவரும், தங்களுடைய கோரிக்கையை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை, கிளிநொச்சியில் வைத்து, 2016 ஆம் ஆண்டு படுகொலைச் செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் என குற்றஞ்சாட்டி, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.