தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் துரித விசாரணை – பிரதமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

யாழ்.யூ.எஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் காட்டப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு என ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர்,

“..முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கொலை தொடர்பில் நடந்த விசாரணைகளில் ஏற்பட்ட திருப்பத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்துவோம். இந்த ஆட்சியின் போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு சம்பவமாகத்தான் விசாரணைகளை நடத்த வேண்டும். முழு காவல்துறையையும் இந்த விசாரணைகளுக்காக ஈடுபடுத்த முடியாதுள்ளது..” என்றார்.