தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த விடயத்தில் அவருக்கு சவால்கள் உள்ளன. அவற்றை சமாளித்து அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனைச் செய்வாராயின் அவரை உள்நாட்டில் பிரச்சினையைத் தீர்த்துவைத்த தலைவராக சர்வதேசம் அங்கீகரிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று(19) யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது;
“..தமிழ் மக்கள் தனிநாட்டைக் கேட்கவில்லை. தங்களுக்கான அதிகாரங்களை ஐக்கிய இலங்கைக்குள்ளே பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாட்டை இப்படியே கொண்டு செல்ல முடியாது. நாடு மிகப்பெரிய துன்பங்களையும் பொருளாதார பின்னடைவையும் சந்தித்துள்ளது.
இலங்கையை விட பின்தங்கியிருந்த பல நாடுகள் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளன. உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்காது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. ஜனாதிபதி, தான் எதிர்கொள்கின்ற சவால்களில் இருந்து மேலெழ வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு சவால்களும் உள்ளன. அவற்றைச் சமாளித்து தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஜனாதிபதி செய்வாராக இருந்தால் சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என அங்கீகரிக்கும்..” என தெரிவித்திருந்தார்.