தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு இன்று(06) செவ்வாயன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு கொள்ளப்பட்டபோதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தயா மாஸ்டர் சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.