பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வேலாயுதன் தயாநிதி என்ற தயா மாஸ்டர் சிறையில் இருந்து கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தயா மாஸ்டருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
எனினும் நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறிய நிலையில், அன்றைய தினம் பிணையில் செல்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய தினம் பிணை நிபந்தனைகளை தயா மாஸ்டர் பூர்த்தி செய்ததை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
நான்கு அரச உத்தியோகத்தர்கள் இன்று நீதிமன்றத்தில் கையொப்பமிட்டதுடன், பணமும் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட நிலையில் தயா மாஸ்டர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை தயா மாஸ்டர் தினமும் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரைக்குள் கையொப்பமிட வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது என்றும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது