தலைமுடிக்கு தேன் பயன்படுத்தலாமா?

தேனைக் கொண்டே உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும். எல்லாருக்கும் தலைக்கு மேல இருக்கிற பிரச்சனை என்றால் அதில் நிச்சயம் தலைமுடிப் பிரச்சனையும் இடம்பெற்றிருக்கும்.

எண்ணற்ற மருந்துகளை தடவியும் வாரம் ஒரு முறை பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றிப்பார்த்தும் தலைமுடி உதிர்வது மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தலைமுடிக்கு ஊட்டமளிக்க ஒரேயொரு விஷயத்தை செய்தால் போதும். வீட்டிலிருக்கும் பொருளைக் கொண்டே தலைமுடியை நாம் பராமரிக்கலாம்.

தேன் தலைமுடிக்கு பயன்படுத்தலாமா? இந்த கேள்வி பலருக்கும் இருக்கிறது. தேன் ஒரு இனிப்பு பண்டம். தேன் தலையில் தேய்த்தால் சரியான முறையில் தலைக்குளிக்க வேண்டும் இல்லையென்றால் தலை அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு அதோடு எறும்பு பயமும் உண்டு. அதனால் தான் தேனை தலையில் தேய்க்ககூடாது என்று சொல்லி வைத்தார்கள்.

வரண்ட முடி :
அரை கப் தூய தேனை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீரைக் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதனை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள், முக்கியமாக முடியின் வேர்கால்களுக்கு தேன் பட வேண்டும். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசலாம். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டே தலைக்குளிக்கலாம்.

தேன் மற்றும் முட்டை :
மஞ்சள் கருவில் இருக்கும் விட்டமின் ஏ தலையை வரண்டு விடாமல் செய்திடும். முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்து அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து தலையில் ஹேர் மாஸ்க்காக போட்டுக் கொள்ளலாம். ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும் தலைக்குளிக்கலாம். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

தேன் மற்றும் வாழைப்பழம் :
ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இரண்டு டீஸ்ப்பூன் தேன் சேர்த்திடுங்கள். இந்த கலவை நன்றாக கலந்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். வேண்டுமானால் விரைவில் காய்ந்திடாமல் இருக்க ஷவர் கேப் போட்டுக் கொள்ளலாம்.

தேன் மற்றும் தயிர் :
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை மிக்ஸ் செய்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் முடியை ஒவ்வொரு லேயராக பிரித்து இந்த கலவையை தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்குளிக்கலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன் மற்றும் தேங்காய் பால் :
தேங்காயில் பொதுவாக எண்ணெய்ப் பசை இருக்கும். இது முடியை வரண்டு விடாமல் பாதுகாக்கும். அரைகப் தேங்காய் பாலுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள்.பின்னர் இதனை தலையில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழிவிடலாம்

கவனிக்க வேண்டியவை :
முடியை உதிராமல் தடுக்க தேனை பயன்படுத்துவதற்கு முன்னால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சந்தைகளில் கிடைக்கும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேனை விட சுத்தமான தேன் வாங்க வேண்டும். தேன் ஹேர் பேக் போட்டு கழுவிய பின்னர் உடனேயே அதிக வெயிலில் செல்லக்கூடாது. நேரடியாக சூரிய ஒளி தலையில் படாதவாறு செல்ல வேண்டும். இந்த ஹேர் பேக் எல்லாம் போடுவதற்கு முன்னர் தலையை இலேசாக ஈரமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் ஹேர் பேக் எளிதாக பரவும். தலைக்குளிக்கும் போது சாதாரண தண்ணீரை பயன்படுத்துவதே நல்லது வேண்டுமானால் இலேசாக சூடாக்கப்பட்ட நீரை பயன்படுத்தலாம் சூடான நீரை பயன்படுத்தினால் தலை வரண்டிடும்.