புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால் தான், தலைமுடி பாதிக்கப்படும் மற்றும் தலைமுடி வளர்வது தடுக்கப்படும். இத்தகைய புரோட்டீன் முட்டையில் ஏராளமான அளவில் உள்ளது. முட்டையில் அனைத்து விதமான அத்தியாவசிய புரோட்டீன்கள், தலைமுடியை வலிமைப்படுத்தும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் முட்டை முடியில் உள்ள எண்ணெயை தக்க வைப்பதோடு, தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.
முட்டை மற்றும் தேன்:
ஒரு பௌலில் 1 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலையில் தடவி, ஷவர் கேப்பை அணிந்து கொள்ள வேண்டும். 20 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள். இதனால் தேன் மயிர்கால்களை வலிமைப்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை என சில வாரங்கள் பயன்படுத்தினால், தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.
தயிர் மற்றும் முட்டை:
ஒரு பௌலில் 1/4 கப் தயிர் மற்றும் 1 முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசியப் பின், இந்த கலவையைத் தடவ வேண்டும். பின்பு குறைந்தது 5 நிமிடம் தலையில் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இந்த செயலை நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போதும் பயன்படுத்தலாம்.
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்:
ஒரு பௌலில் 1 முட்டையின் மஞ்சள் கருவைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். ஒருவேளை உங்கள் தலைமுடி மிகவும் எண்ணெய் பசையுடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை ஷாம்பு பயன்படுத்தலாம்.
வினிகர் மற்றும் முட்டை:
ஒரு பௌலில் 2 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை தலையில் தடவி நன்கு ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலசுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால், தலைமுடி மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.