றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலையின் தகவல்களை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவினை சுமார் ஒருவருடத்திற்கும் மேல் சிறையில் வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என அவரது தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி இன்று(01) கொழும்பு நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்த சட்டத்தரணி, எந்தவொரு நபரையும் ஒருவருட காலத்திற்கு மேலாக விளக்கமறியலில் வைத்திருக்க வேண்டும் எனின் பிணைச் சட்டத்தின் 17ம் சரத்தின் கீழ் உயர் நீதிமன்றில் விசேட அனுமதியினை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், இதுவரை அவ்வாறானதொரு அனுமதி பெறப்படாது அநுர சேனாநாயக்கவினை விளக்கமறியலில் வைத்திருப்பது அவரதுஅடிப்படை உரிமை மீறல் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அநுரவுக்கு பிணை வழங்குவது அல்லது விடுவிக்கும் உரிமை உயர்நீதிமன்றிற்கே உண்டு எனவும் ஆதலால் அநுரவால் முன்னர் தாக்கல் தாக்கல் செய்த மனுவினை நாளை(02) உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
அநுர சேனாநாயக்க கடந்த வருடம் மே மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.